Ooty Cab / Taxi to Baralikaadu Natural Tour
அதிகம் அறியப்படாத பரளிக்காடு Baralikadu Tourist Place கோவை: கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் இருக்கிறது காரமடை. அங்கிருந்து கிளை பிரியும் தோலாம்பாளையம் சாலையில் சென்றால் சுமார் 30 கிலோமீட்டர் பசுஞ்சாலைப் பயணத்திற்குப் பின் பில்லூர் அணைக்கட்டைச் சென்றடையலாம். முன் பதிவு குறுகலான மலைப்பாதையில் பயணித்தால் அணைக்கட்டை ஒட்டி இருக்கும் பரளிக்காடு எனும் மலையோர கிராமத்தை சென்றடையலாம். இங்கு வாழும் பழங்குடியினர் நலனுக்காக வனத்துறையே வடிவமைத்தது தான் பரளிக்காடு பசுமைச் சுற்றுலா. இங்கு செல்ல வனத்துறை அலுவலரிடம் தொலைபேசியில் முன் பதிவு செய்ய வேண்டும். விடுமுறை தினங்கள் என்றால் கூட்டம் அதிகம் இருப்பதால் எண்ணிக்கையைப் பற்றி கவலை இல்லாமல் முன்பதிவு செய்து கொள்ளலாம். வார நாட்களெனில் குறைந்தது 40 நபர்கள் கொண்ட குழுவாக இருந்தால் மட்டுமே முன் பதிவு செய்வார்கள். பெரியவருக்கு ரூ.300 குழந்தைகளுக்கு ரூ.200 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பரிசல் பயணம் ஆற்றங்கரையோர ஆலமரங்களில் நீண்ட ஊஞ்சல்கள் கட்டப்பட்டுள்ளன. குளிர் தருக்களின் கீழ் கயிற்றுக் கட்டில்கள் போடப்பட்டுள்ளன. சிறார்கள் ஊஞ்சலாடி மகிழ்கிறார்கள். காதலர்களும், தம்பதியர்களும் இதமான சூழலை அனுபவித்த வண்ணம் கயிற்றுக் கட்டில்களில் அமர்ந்து பேசிக் களிக்கிறார்கள். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் பரிசல்கள் வந்து சேர்கின்றன. வழிகாட்டி அனைவரையும் உற்சாகமாக கூவி அழைத்து அனைவருக்கும் 'லைஃப் ஜாக்கெட்டுகளை" அணிவிக்கிறார். சிந்தெடிக் பைபர்களினால் ஆன அகன்ற வட்டுக்களில் பயணம் தொடர்கிறது. கண்ணுக்கெட்டிய தூரம் மட்டும் தண்ணீரன்றி வேறில்லை. பரிசலோட்டி அணைக்கட்டின் வரலாற்றையும், ஆற்று மீன்களின் சுவையையும், மிருகங்கள் தண்ணீர் அருந்தவருவதையும் சொல்லிக்கொண்டே துடுப்பை போடுகிறார். என்னதான் நட்டாற்றில் பயணித்தாலும் வெயில் மண்டையைப் பிளக்கத்தான் செய்கிறது. சுற்றிலும் உயரம் குறைவான மலைகள் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். கிராமத்து உணவுகள் பரிசல் மறுகரையை அடைந்ததும் பயணிகளின் ஆட்டமும் பாட்டமும் ஆரம்பமாகிறது. கொஞ்சம் பெரியவர்கள் வழிகாட்டியின் உதவியோடு குறுக்கும் நெடுக்குமாய் விழுந்து கிடக்கும் மரங்களில் ஏறி இறங்கி வனத்திற்குள் நுழைகிறார்கள். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின் மதிய உணவு தயார் என்ற அறிவிப்பு வருகிறது. மீண்டும் பரிசல் ஏறி மறுகரைக்குச் சென்றால் மலைவாழ் மக்களே தயாரித்த சுவையான உணவு வகைகள் காத்திருக்கின்றன. பஃபே சிஸ்டம். நகர்ப்புறத்துக்காரர்களுக்கு கிராமத்து உணவுகளில் பிரியம் இருக்காது என்பதால் மெனுவில் வெஜ் பிரியாணி, சப்பாத்தி, தயிர்சாதம் என சமதர்மம் கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய மெனுவில் இருந்த கேப்பை களி உருண்டையும், அதற்குத் தொட்டுக்கொள்ள கொடுத்த கீரை கடைசலும் 'கொண்டா கொண்டா" என்றிருந்தது. டிரெக்கிங் சிறிய இளைப்பாறலுக்குப் பின் தொடங்குகிறது டிரெக்கிங். வனத்துறை வழிகாட்டி உதவியுடன் காட்டிற்குள் நடக்கத் துவங்குகிறோம். பரளிக்காடு வனம் அடர் வனம் அல்ல. இலகுவானது. பிரம்மாண்டமான மரங்களோ, முட்புதர்களோ, காட்டுக்கொடிகளோ வழிமறிக்காததால் நடை எளிமையாக இருந்தது. சாகச மனங்களுக்கு சற்று ஏமாற்றம்தான் என்றபோதும் குழந்தை குட்டிகளோடுச் செல்ல மிகவும் ஏற்ற சிக்கல்களில்லாத காட்டுப்பயணம். ஆற்றில் குளியல் பிரயாணத்தின் இறுதிப் பகுதி அத்திக்கடவு ஆற்றில் ஆனந்தக் குளியல். காவியைக் கரைத்த மாதிரி செம்மண் நிறத்தில் கரைபுரண்டு வருகிறது ஆறு. காலம் தப்பி வந்த திடீர் மழையால் ஆற்றில் நல்ல வெள்ளம். படுகை முழுக்க யானை முதுகு போன்ற பிரம்மாண்டமான பாறைகள். நூற்றாண்டு உருளலில் கற்கள் அனைத்தும் தனக்கான தனிப்பொலிவை அடைந்திருக்கின்றன. வீட்டுப்பெண்கள் உருளைக்கற்களை ஆசையோடு சேகரித்துக்கொள்கின்றனர். கிழங்கு மஞ்சள் அரைக்க, பூண்டு நசுக்க, பனங்கற்கண்டு நுணுக்க அருமையான உபகரணம். ஆற்றின் கரையோரத்தில் உயரம் உயரமான மாமரங்கள் தலைகொள்ளாத மாங்காய்களுடன் காய்த்து நிற்கின்றன. மழைச்சகதியில் விழுந்து கிடக்கும் மாம்பிஞ்சுகளைப் பொறுக்கியெடுத்து ஆற்றில் கழுவி உப்புச் சேர்த்து திங்க சுவை அபாரம். நீந்திக் குளிக்க முடிகிற அளவிற்கு ஆழமில்லாத ஆறு. பாறைகள் வேறு அதிகம். ஒரு குத்துப்பாறையினைப் பிடித்துக்கொண்டு உடலை நீட்டிக்கொண்டால் நம்மைக் கழுவிக் கரைக்கும் ஆவேசத்துடன் தழுவிக்கொள்கிறது ஆறு. இறங்கிய ஜனங்களெல்லாம் பாறைகளோடு பாறையாக ஊறிக்கொண்டேதான் இருக்கிறார்கள். கரையேற எவருக்கும் மனமில்லை. மாலைச் சூரியன் மெள்ள மேற்கில் சரிய வழிகாட்டி குரலெழுப்புகிறார். பெண்கள் உடைமாற்ற வசதி இல்லாதது பெரிய குறை. பெரிய மரங்களைத் தேடி ஈர ஆடைகளோடு அலைகிறார்கள். என்னதான் இயற்கையோடு இணைந்த இடம் என்ற போதும் பரளிக்காட்டை ஒரு சுற்றுலாத் தலமென அங்கீகரிக்க மனம் ஒப்பவில்லை. குடும்பத்தோடு காலையில் கிளம்பி மாலையில் வீடு திரும்பிவிட முடிகிற ஒரு பிக்னிக் ஸ்பாட்டாகத்தான் கருத முடியும். சீதோஷ்ணம், வன விலங்குகள் இல்லாமை, அடர்த்தி இல்லாத காடு என்பன அக்கருத்தாக்கத்தின் காரணிகள்.
Baralikaadu taxi, karamadi cab , baralikaadu natural tour, pillur dam, tholaampalayam.